Friday, January 12, 2018

ஒரே ஒரு பொய்


ராம் ரொம்ப நல்லவன். அது எல்லோரும் சொல்ற விஷயம். நான் வேலைக்கு சேர்ந்த அன்னிக்கே என் மனசுல பதிஞ்சிடுச்சி. யார் சொல்லிணு தெரியல . முதல் நாள் பயம் , புது இடம் புது ஆளுங்க . நிறைய மக்கள் நிறைய பொய். நான் இந்த போலிஸ் வேலைக்கு சேர்ந்ததே ஒரு பொய் தான். அப்பா கேட்கும் போது பிடிக்காம இருந்தும் ஓத்துக்கிட்டு வந்து சேர்ந்தாச்சு.

எல்லோரும் பொய் சொவாங்க. அது சில பேருக்கு ஒரு முகமூடி சில பேருக்கு அன்றாட வழக்கம். சின்ன சின்ன பொய் சொல்லாம யாரும் இருக்க முடியாது. சில பேருக்கு சின்ன அளவில் கீறல் சில பேருக்கு ரொம்ப ஆழமான வெட்டு . ஆனால் கீறல் இல்லாதவர்கள் யாரும் இல்லை இந்த உலகத்திலனு நம்பினேன். ராம் ஸார் பார்க்கிற வரைக்கும்.

இப்படி ஒரு மனுஷனா? எப்படி இப்படி இருக்கார்னு பிரம்மிச்சு போகிருக்கோம்,  என்ன மாதிரி புதுசா சேர்ந்த அத்தனை பேரும். எனக்கு இந்த வேலை புடிச்சிருக்கு. இது நான் எனக்கு தினம் சொல்ற பொய். நான் மட்டும் இல்லை. இந்த சூப்பர் பாஸ்ட் உலகத்தில் வேலைக்கு போற அத்தனை பேரும் சொல்ற பொய். ஆனா இந்த மனுஷன். வேற லெவல்.

எல்லோரும் அவர் கூட பழகனும்னு துடிச்சாங்க ஸ்டேஷன்ல . ஆனால் அத விட எல்லோரும் அவர் போல இருக்கனும்னு நினைச்சாங்க. ரொம்ப சிரிக்க மாட்டார். வள்ளுன்னு விழ மாட்டார். ஒரு மிடுக்கு. யாருக்கும் அவர் கூட பேசலாம்னு தோன்ற மாதிரி ஒரு முகம். முக்கியமா அவரது நேர்மை. பொய் சொல்ல மாட்டார் தப்பு செய்ய மாட்டார்னு எல்லாரும் நினைச்சாங்க.

ஒரு மனுஷன் நாற்பது வருஷம் பொய் சொல்லாம இருக்க முடியுமா சத்தியமா தெரியாது. ஆனால் ராம் இருந்திருப்பார்னு எல்லோரும் நம்பினோம். அப்படி ஒரு மனுஷன். அந்த கலவரம் நடக்கும் நாள் வரை.

வழக்கமான கலவரம் தான். ஜாதியா மதமா இல்ல அரசியலானு யாருக்கும் தெரியாது. நடத்தினவங்களுக்கே தெரியுமானு சந்தேகம் தான். எப்பவும் போல விசாரணை கமிஷன் அறிக்கைல தெரிஞ்சிக்க வேண்டியது தான் . எங்களை காலைல ஒரு பத்து மணிக்கு பீச் ரோடு வர சொன்னாங்க . நெருப்பா கடமை செய்ய கிளம்பிட்டோம். இஸ்திரி போட்ட யுனிபார்ம் கைல லத்தியோட வந்து இறங்கியாச்சு. ராம் ஸார் தான் இன்சார்ஜ் . அப்போ எல்லாம் சரியா நடக்கும்னு நம்பினோம். ஒரு வாரமாக கூட்டம் அங்கு நடக்கிறது தமிழ்நாடே பார்த்துகிட்டு தான் இருக்கு. நமக்கு அங்கு டியுட்டி கிடைக்காதான்னு எனக்கே அடிக்கடி தோனும். கிராமத்தாள்ங்கறதால  ஒரு ஈர்ப்பு.


க்ரவுண்டு கன்ட்ரோல்னு சொல்வாங்க அந்த டியுட்டிய . பச்சையா சொல்லனும்னா கும்பல் மேய்க்கும் வேலை. நல்லாதான் போச்சு மதியம் வரைக்கும். திடிரென சத்தம் கூச்சல் களேபரம். கல்லு பறக்க ஆரம்பித்து பத்து நிமிஷத்துல அத்தனையும் ஏவுகணையா மாறிடிச்சு. தடுக்க மட்டுமே ஒப்புக்கிட்டு இருந்தேன்.  எங்கள திருப்பி அடிக்க ஆனை. அங்க இங்க தேடி பாத்தா ராம் ஸார் கடுப்பில் வந்த கட்டளையை ஆற்றினார். உணர்வு வேற கடமை வேறன்னு சொல்லாம சொல்லி குடுத்தார் எங்களுக்கு. கடமையை செஞ்சோம்.


ஒரு அளவுக்கு கட்டுபாட்டில் வந்தது. சின்ன பசங்கதான் எல்லோரும். ஒரு இரண்டு வருஷம் முன்னாடி நான் அந்த பக்கம் நின்னிருப்பேன். அடிக்கு பயப்படல . ரத்தம் கொட்டினா கூட கவலை படல. தெம்பாக நின்னாங்க. ஆனால் கொஞ்ச கொஞ்சமாக பின்னால் தள்ளப்பட்டார்கள். அப்போது ஒரு ஓரமாக ஒரு கும்பல் எதையோ சுத்தி நிற்க, ஓடிப் போய் பார்த்தா நம்ம ராம் ஸார் ஒரு சின்ன பையன தன் மடியில் வெச்சுக்கிட்டு இருந்தார். தலையெல்லாம் ரத்தம். பாதி மயக்கம்.

ஆம்புலன்ஸ் ஆம்புலன்ஸ்னு ஸார் கத்திகிட்டு இருந்தார். எவனோ இதோ வருதுனு பதில் சொன்னான். அந்த பையன் ஸார் சட்டை பிடிச்சு கிட்ட இழுத்தான்.

"ஸ…ஸார் . ஒன்னு கேட்கட்டா "

" சொல்லுப்பா "

" நாங்க நல்லது தான் பன்னோம்.. அதுல சந்தேகம் இல்லை. இந்த மீடியா அரசியல்வாதி என்ன வேனும்னாலும் சொல்லட்டும். கவலை இல்லை."

"சரி இப்போ கொஞ்சம் சும்மா இரு . ஆம்புலன்ஸ் வருது. ஹாஸ்பிடல் போயிடலாம்."

"அது வரட்டும் ஸார். . ஒரே ஒரு கேள்வி "

" என்ன சொல்லு"

"நாங்க ஜெயிச்சிட்டோமா ஸார்? "

ஒரு பத்து வினாடி மௌனமாக இருந்தார் ஸார்.

"ஜெயிச்சுடீங்கடா "

நான் பார்த்து ராம் சொன்ன ஒரே ஒரு பொய் அது தான்.

0 comments: